வியாழன், 14 ஜனவரி, 2016

பச்சையா சொல்லட்டுமா ?

தமிழர் திருநாளாம் பொங்கல் இன்று .
தமிழ் உள்ளங்கள் கொண்ட அனைவரையும்
தமிழ்ப் பண்பு நிறைந்த அனைவரையும்
யாம் வாழ்த்தி மகிழ்வோம்.

இந்த நன்னாளில், எனது இதயத்தில் இணைந்தவரை
 என் மனக்கண் முன் நிறுத்தாது இருக்க இயலாது.

நான் இதுவரை இவரை நேரில் பார்த்ததில்லை. 

தாகம் கொண்டு
தவிக்கும் தமிழ்  நெஞ்சங்களுக்கு  இவர் 
தாமிரவரணி நீர். 

தன்னை ஒரு குயில் என்பார் இவர்.

"கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்...."

என் எண்ண அலைகள் வரிசைகளில் அவற்றின் நீள அகலங்களில்   (wave length ) இவர் என்னுள் அல்லது மிக்க அருகில் இருக்கிறார். , அவருள் நானும் இருந்தால் அது நான் செய்த புண்ணியமே. . இவர் மரபுசாரா கவிதைகளில்  நான் உருகி உறைந்து போன நாட்களும் பல உண்டு.
+mohan gurumurthy

வானவில்லை தொட்டுப் பார்த்ததில்லை  யாரும். அதனால், வானவில்லை யாரும் தெரியாது என்று சொல்வார்களோ ! அது போலத்தான், இவரது வலைத் தளமும். இவரது உள்ளம் இவரது எழுத்துக்களிலே தெரிகிறது.

 இந்த வான வில்லார் தான் இப்புவியில் பிறந்து அறுபது ஆண்டுகள் முடிவடைந்ததை  இன்னும் சில நாட்களில் சென்னையில்  கொண்டாட இருக்கிறார். 

இந்தக் கிழவனுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அது இந்தக் கிழவனின் பாக்கியம். 

சுப்பு தாத்தா  இன்னும் ஏழு  ஜன்மங்கள்  ஏழு வண்ணங்களில்  எடுத்தாலும் வான வில்லார் போல  எழுத இயலுமோ ? ஊஹூம்.. இயலாது. 

வானவில் மனிதன் எனப் பெயர் கொண்ட இவர் வலைத்தளம் 
எனக்கு ஒரு தலம் . சிவஸ்தலம். 

 பல நேரங்களில் அத்தளம்  எனது அகக் கண்களைத் திறந்து இருக்கிறது என்றால் உண்மை.

நிற்க.



அண்மையிலே இவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமது சுற்றம், உற்றம் யாவருக்கும் சொல்லும் தருணத்தில், புத்தாண்டு உறுதிகள் என்றும் சொல்லி, அதில் மனப்பக்குவம் பற்றி எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதே சமயம் பல ஐயப்பாடுகளையும் கிளப்பி இருக்கிறார்.

அது என்ன ஆங்கிலப் புது வருட முதல் நாளன்று தான் உறுதிப்பாடுகள் எடுக்க வேண்டுமா என்ன?  தமிழ்த் திருநாள் பொங்கல் தமிழ் மக்களின் புத்தாண்டாகவும் பலரால் கொண்டாடப்படுகிறதே !! 

ஆக, நான் இந்த பொங்கல் திரு நாளன்று அதே உறுதிகள் அடங்கிய மனப்பக்குவத்தை அடையலாம் என்று நினைத்தேன். அந்த உறுதிகளை எடுத்துக்கொள்வோமே என நினைத்தேன்.

அதற்கு முன் அதை இன்னும் ஒரு முறை படித்து உள்வாங்கிக்கொள்வோம் என நினைத்தேன்.

பின்னே வருவது நீல நிறத்தில் அவர் கருத்து.
கருப்பில் இருப்பது எனது உரத்த சிந்தனைகள் அல்லது மன ஓட்டங்கள்.(loud thinking)


மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
      சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்....
.

   (  அந்த "பிறர்" குறித்த நமக்கு  கடமைகள் எதுவும் இல்லாத போது இவ்வாறு நினைப்பது சரியே எனத்தோன்றினாலும் , தன்னைச் சார்ந்த சமூகம் அல்லது உற்றம் தவறான பாதையில் செல்கிறது என்பதைப் புரிந்தும் அதைக்கண்டு கொள்ளாது இருத்தல் தகுமோ தகுமோ ? என்று ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.

    இரண்டாவது, சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொண்டால், நம்மை சந்தர்ப்பவாதி என்று சொல்ல இடம் தராதா ?

        ஒரு பேச்சுக்கு வேண்டுமானால், ஒரு நண்பர் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் "நாங்கள் காபி, டீ அருந்துவது இல்லை. ஆகவே, உங்களுக்கு மோர் தருகிறோம் என்றால், சாப்பிடலாம். "

        அதற்கு மேலே.....    கடைப்பிடிப்பது சந்தேகம் தான்.

என்னைப் பொருத்தவரை.  
            நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் 
            மேற்சென்று இடித்து விடல் 

      நான் இடிக்க மட்டும் இல்லை. சில சமயம் என்னையே அறியாமல், கடித்தும் விடுகிறேன். 
2.  பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....

    ஏற்றுக்கொள்ளுதல் முடியாவிடினும், பொறுத்துக்கொள்ளுதல் முடியும் என நினைக்கிறேன். வாள் கொண்டு தாக்கவேண்டும் என்று சூழ்நிலை சொல்லினும் வாளா இருப்பது கடினம் தான். முயன்று பார்க்கவேண்டும்.

3.
அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து

  கொள்ளுதல்......
 
       "இன்னாயா இந்த தண்ணி போடுறியே, உடம்புக்கு ஒத்துக்காதையா..லீவர் டாமேஜ் ஆகிடும்." என்றேன் என்னோடு வேலை செய்பவர் ஒருவரிடம் (ஒரு 30 வருடத்துக்கு முன்பு. ) 

"நீ என்னாத்தே சொல்றே !! உனக்கு என் மாதிரி ஒரு வைப் இருந்தா இது மாதிரி சொல்வியா? என்று எதிர்க்கேள்வி போட்டார் அவர்.

" இன்னாயா அவ செஞ்சா இப்படி நீ குடிலேயே பாதி சம்பளத்தை செல்வளிக்கிறே ? "

என்றதற்கு, ஒரு போடு போட்டார்:  

"சீட்டாடினா, வீட்டுக்கு வராதே அப்படின்னு சொல்லிட்டாடா அப்பவும் சரி பாதி சம்பளம் சீட்டிலே சிலவாயிட்டு தான் இருந்துச்சு." 

 என்று அழுதார். 

       அவரவர் நோக்கில் அவரவர் சரிதான் எனும் நிதர்சனம் எனக்கு அன்னிக்கே புரிஞ்சு போச்சு.  
 
4.
நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....


        சில சந்தர்ப்பங்களில் வேறு வழியே இல்லை என்பது உண்மை தான். நாம்  விரும்புகிறோமோ இல்லையோ, சில விஷயங்கள் go to their logical end, whatever we feel notwithstanding. அவிஸ் விஸ்வநாதன் அவர்கள் வலைத் தளம் இது பற்றி அலை அலையாக அளித்திடும் அறிவுரைகள் இன்னமும் இந்த வயதிலும் நான் படிக்கவேண்டும்.  தொடர்ந்து.

 5 .உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை 
   அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....

 
   சூப்பர் சஜஷன் இது. நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. Unconditional Love is the spring board of all happiness . வாஸ்தவம். அதே சமயம், அதற்காக, நமது உறவினருக்கு எதிர்பார்ப்புகள் இருந்தால், நாம் தரும் எதுவும் அவர்களுக்கு ஆனந்தமோ திருப்தியோ ஏற்படாது என்பதும் வாஸ்தவம் தானே. 
       
     

6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....
 
    செய்தாலும் அல்லது செய்யாது இருந்தாலும் என்று சொன்னாலும் இது சரி என்றே தோன்றுகிறது .   svaanthas sukaaya எனும் இந்த கன்செப்ட் பற்றி பன்முறை நான் எண்ணியது தான். சொன்னது தான்.  இதை அடைய ஆனால் ஒரு nobility or magnanimity தேவை.  துளசிதாசர் ராமசரித மானஸ் எழுதியபோது , எல்லோரும் கேட்டார்களாம்: ஏற்கனவே, வால்மீகி ஒரு 24000 க்கு மேலே ஸ்லோகங்கள் இருக்கும் காவியம் இருக்கிறதே. இன்னுமொரு காவியம் எதற்கு என்ற பொழுது, அவர் சொன்னாராம்:  இது எனது திருப்திக்காக, ஆத்ம திருப்திக்காக செய்கிறேன் என்றாராம்.  Detatchment from the result and equally attachment to the process that leads to the result is what is needed. ஹூம்... முடியுமா தெரியல்ல..

 7. நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ

  முயல்வதை விடுத்தல்....
   இது ரொம்ப ப்ராக்டிகல் தான். ஆனால் , செய்வன திருந்தச் செய் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல நேரங்களில், திருப்பிச் செய் என்று பல முறை சொல்லப்பட்டும் இருக்கிறேன். இருக்கட்டும். ஆனால், 6ம் எண் விதியில் இது அடங்கிப்போய் விடுமே !!
 
8.
பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை

  நிறுத்தல்....
   நிறுத்தினாலும் நிறுத்தாவிட்டாலும்  இந்த உலகத்திலே ஒவ்வொருவருமே யுனீக் . ஒரு மரத்திலே லட்சக்கணக்கான இலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல தோற்றமளித்தாலும், எந்த ஒரு இலையும் இன்னொரு எந்த ஒரு இலையின் பரிதி அல்லது பரப்பளவுடன்   ஒன்று படாது. They look alike, albeit never congruent. அது போல் தான் மனிதராகிய நாமும்.   ஒப்பிட்டு பார்த்து என்ன செய்யப்போறோம் ? எது முடியும் ? எது முடியாது ? எதை மாற்ற இயலும் ? எதை நம்மால் மாற்ற இயலாது ? இந்த இரண்டுக்குள் என்ன வித்தியாசம் கீது ? இதை புரிஞ்சுகிட்டாலே போதும்.  கலாம் சார் படிச்ச காலேஜ் லே தான் நான் படிச்சேன். அவரு படிச்ச சப்ஜெக்ட் தான் நானும் படிச்சேன். அதுக்காவ், நான் என்னை கலாம் சாரோடு  ஒப்பிட முடியுமா? அவருக்கு சலாம் போடக்கூட எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.
வொண்டர்புல். ஸோ நோ கம்பாரிசன் . 
நம்ம நாமாகவே இருப்போம்.  Be yourself. 
And that is fine. 
 
9.
நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்

  இருக்க முற்படுதல்.....

      நூற்றுக்கு நூறு செயல்படுத்த முடியும்.

 ( கிழவி  காலைலேந்து காபி தண்ணி குடிக்கலையே..!! என்னனு பார்க்கணும்.  )



    To be peace with oneself is the Greatest Gift of God. It is time we understand the underlying Truth in this Statement. 
 
10.
நம் சந்தோஷத்தை பொருட்களுடன்பொருத்திக்

  கொள்ளுவதை அறவே நீக்குதல் ...

     சந்தோஷத்திற்கும் பொருட்களுக்கும் இடையே உள்ளது அட்டாச்மென்ட் .
நான் வேறு, இந்தப் பொருள் வேறு என்ற பாவம் வருமா ?? !!! சந்தேகம் தான். இதுலே என்ன கஷ்டம் என்பவர்க்கு ஒரு டெஸ்ட். உங்கள் பெயர் என்ன? என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் வரும்.  அந்தப் பெயர் உங்கள் உடலுக்கா, உடலில் உள்ள உயிருக்கா? என்று கேளுங்கள். இது என்ன அபத்தமான கேள்வி என்று கேட்கக் கூடாது. உண்மையிலே இது ஒரு ஆபத்தான கேள்வி.  நமது உயிர் போன பின், நமது உடல் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. இல்லையா. !! உடல் அழிந்தபின்பும் நாம் உலகத்தாரால் அறியப்படுகிறோம். அந்த வகையில் நாம் தொடர்ந்து இருக்கிறோம். அப்படி அந்த நிலையில் நாம் இருக்கும் சாத்தியம் தெரியும் போது , அதாவது உடல் உணர்வு நீங்கிய நிலையில் இருக்க இயலும் என உளமார உணர்ந்து,  மரிக்க இருக்கும்  இந்த உடலுக்கு சந்தோஷத்தைத் தரும் பொருட்களை நாம் தவிர்க்க இயலும். அதுவும் சாத்தியம் என்று தான் தோன்றுகிறது. 

இது என்ன பெரிய விஷயம் என்பவர்க்கு, 
காலைலே காபி சாப்பிடுவதை இன்னிலேந்து வேண்டாம் என்று முடிவு எடுங்கள் பார்ப்போம்.


 
11.
தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
   உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,

      சைகாலஜி லே இது அடிப்படைலே இரண்டாவது அத்தியாயப் பாடம். Basic Difference Between Need and Want.  ஒரு நாள் என் வகுப்பிலே ஏகப்பட்ட உதாரணம். சொன்னேன்.  ஊஹூம். ஆடியன்ஸ் மூஞ்சி சொல்லிச்சு. ஒண்ணும் புரியல்லையே..!!

. இன்னாதான்யா சொல்றே அப்படின்னு ஒத்தர் எழுந்து நின்னு கேட்கறாரு. 

பச்சையா சொல்லட்டுமா என்றேன்.

 பச்சை, சிவப்பு, ஊதா,மஞ்சள்  , நீலம் எந்தக் கலர் வேணுமானாலும் சொல்லுங்க என்றார். 
.
     சொன்னேன். 

     அடே ..  ஆமாம் சார். என்றார். 

     உங்களுக்குத் தெரியணுமா.  எனக்கு செல் அடிங்க. சொல்றேன்.


*********************************************************************************
                                           
      இந்த 
பொங்கல் தினத்தன்று நான்  எடுக்கப்போகும் ,
      இந்த பதினொன்று உறுதிப்பாடுகளில்  அஞ்சு ஆறுன்னாச்சும் அடுத்த பொங்கல் வரை தேறுமோ ?? தெரியவில்லை. 
   
    இந்த உறுதிப்பாடுகளை ஈந்த வள்ளல் 

வானவில்லாரை யாம் வாழ்த்துவோம்.
வாழ்வுக்கு ஒரு பொருள் தேடுவோம்.



பொங்கும் பால்  எங்கும் மங்களம் தருக.
என வாழ்த்தி மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக